புதிய எதிர்க்கட்சி தலைவர் தேர்வில் சர்ச்சை; மம்தாவுக்கு எதிராக 59 எம்எல்ஏக்கள் போர்க்கொடி: போலி கையெழுத்து விவகாரத்தால் மேற்குவங்கத்தில் பரபரப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், 80 எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் போர்க்கொடி தூக்கியிருப்பது மம்தா பானர்ஜிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல்வேறு இழுபறிகள் நீடித்து வந்தன. கடந்த மே 9ம் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர், சட்டசபை சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் சோவன் தேப் சட்டோபாத்யாய என்பவரை எதிர்க்கட்சித் தலைவராகவும், நயனா பானர்ஜி மற்றும் ஆஷிமா பத்ரா ஆகியோரை துணைத் தலைவர்களாகவும், பிர்ஹாத் ஹக்கீம் என்பவரை கொறடாவாகவும் நியமிக்க கோரப்பட்டிருந்தது.

தொடர்ந்து மே 20ம் தேதியன்று 70 எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் அடங்கிய மற்றொரு கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள கையெழுத்துகள் போலியானவை என ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சஹா ஆகிய 2 எம்எல்ஏக்கள் புகார் அளித்ததை அடுத்து, ஹரே ஸ்டிரீட் போலீசார் வழக்கு பதிவு செய்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சந்தீபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகிய 2 எம்எல்ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது. இச்சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அதிருப்தி கோஷ்டியினரை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது.

கட்சியில் உள்ள 80 எம்எல்ஏக்களில் 59 பேர் தலைமைக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து எம்எல்ஏ முஸ்தாபிசூர் ரஹ்மான் கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் எங்களுக்கு உடன்பாடு இல்லை; சுமார் 59 எம்எல்ஏக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கையெழுத்திட்டுள்ளதாக கேள்விப்படுகிறேன். நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்’ என்றார். இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே பாஜக தலைவரும், முதல்வருமான சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘போலி கையெழுத்து விவகாரத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பஹருல் இஸ்லாம், அரூப் ராய் மற்றும் சுபாஷிஷ் தாஸ் ஆகிய 3 எம்எல்ஏக்கள் தாங்கள் அந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள்’ என்றார்.

Related Stories: