வேலூர், மே 28: காட்பாடி, எழும்பூர் உட்பட சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ், மருந்தக வசதிகளுடன் தொடங்க தென்னக ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே பயணிகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது, ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளுக்கு தேைவயான அடிப்படை கட்டமைப்புகளை உறுதி செய்வது, பயண நேரத்தை குறைக்கவும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 1999ம் ஆண்டு முதல் மாடல் மற்றும் நவீன நிலையங்கள் திட்டம், ஆதர்ஷ் ரயில் நிலையத்திட்டம் என பல திட்டங்களின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. தொடர்ந்து நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், சாதாரண நடுத்தர மக்களுக்கான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், குறுகிய தூர நகரங்களை அதிவேகமாக இணைக்கும் நமோ பாரத் ரேபிட் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு நகரங்கள் இடையே வாராந்திர ரயில்கள், மெமு எக்ஸ்பிரஸ், மெமு பாசஞ்சர் ரயில்கள் என இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர நடப்பு ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ரயில் பயணிகளின் சேவையில் புதிய பரிமாணங்களை எட்டி வரும் இந்திய ரயில்வே நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர அவசர மருத்துவசேவை வழங்கும் மையங்களையும், பார்மஸி, ஆம்புலன்ஸ் வசதியுடன் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக தென்னக ரயில்வே தற்போது, சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய 24 மணி நேர அவசர மருத்துவ சேவை வசதிகளை அமைக்க திட்டமிட்டு அதற்கான டெண்டரை கோரியுள்ளது. அதன்படி, தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகளை (எமர்ஜென்சி மெடிக்கல் ரூம்ஸ்- இஎம்ஆர்ஐக்கள்) இயக்குவதற்கும் மற்றும் பராமரிப்பதற்கும் தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பயணிகள் மற்றும் ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மருத்துவ அறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், முதலுதவி வசதிகள், அவசர சிகிச்சை பிரிவு, அத்தியாவசிய மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவை 24 மணி நேரமும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்திற்கான தகுதியான மருத்துவமனைகள், சுகாதார சேவை நிறுவனங்கள் மற்றும் தேவையான அனுபவமும், சட்டப்பூர்வ உரிமங்களும் கொண்ட மருத்துவ முகமைகள் இந்த திறந்தநிலை மின்-ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கலாம். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை ‘www.ireps.gov.in’ இணையதளம் மூலம் வரும் 1ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி, பயணிகளின் பாதுகாப்பு, உடனடி மருத்துவ வசதி மற்றும் மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலில் இந்திய ரயில்வேயின் இலக்குகளை எட்டுவதில் காட்டும் விரைவான அக்கறையை காட்டுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அவசர மருத்துவ ஆதரவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதிகப்படியான பயணிகள் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையங்களில் தங்களின் பிராண்ட் அடையாளத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளவும் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
மேலும், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் ரயில்வே வழிகாட்டுதல்களின்படி, மேம்பட்ட மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை தங்களின் முதன்மை மருத்துவமனை அல்லது அதனுடன் தொடர்புடைய சுகாதார மையங்களுக்கு பரிந்துரைத்து அழைத்துச் செல்வதற்கும் இது வழிவகுக்கும் என்றும் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
