×

30 வழக்குகளில் தொடர்புடைய மோசடி மன்னன் அதிரடி கைது

திருப்பூர்: ஓ.எல்.எக்ஸ் மூலம் அடுத்தவர்கள் காரை விற்று ரூ.பல கோடி மோசடியில் ஈடுபட்ட மோசடி மன்னன் கைது செய்யப்பட்டார். ஆந்திரா மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் பீமூடு அஜித்குமார் (30). இவர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் ஓ.எல்.எக்ஸ் ஆன்லைன் தளத்தின் மூலம் அடுத்தவர்கள் காரை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 28 மோசடி வழக்குகள் உள்ளன. அங்கு கைதாகி சிறையிலிருந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து தப்பியோடி தலைமறைவானார். தமிழகத்தில் தஞ்சம் புகுந்த அஜித்குமார் கோவையிலிருந்து வேளாங்கண்ணி மற்றும் கன்னியாகுமரிக்கு கால் டாக்சி மூலம் பயணித்துள்ளார். பயணத்தின் போது, டாக்சி ஓட்டுநர் நிவாசனை ஏமாற்றி அவரது வங்கி கணக்கு மூலம் ஆந்திரா நபர் ஒருவரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணப் பரிவர்த்தனை செய்துள்ளார்.

அப்பணத்தில் கன்னியாகுமரியில் ரூ.11 லட்சத்திற்கு நகை எடுத்து, பின்னர் அதைத் திருப்பூரில் உள்ள ஒரு நகைக் கடையில் ரூ.9 லட்சத்திற்கு விற்று ரொக்கமாக மாற்றியுள்ளார். இதற்கிடையில், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனை காரணமாக ஓட்டுநரின் வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே நின்றிருந்த அஜித் குமாரை மடக்கிப் பணத்தைக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த திருப்பூர் போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர் ஆந்திராவில் தேடப்படும் குற்றவாளி என்பதும், திருப்பூரில் ஏற்கனவே மற்றொரு கால் டாக்சி ஓட்டுநரிடம் ரூ.6 லட்சம் ஏமாற்றியதும் அம்பலமானது. மொத்தம் 30 வழக்குகளில் தொடர்புடைய அஜித் குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Tiruppur ,OLX ,Bhimudu Ajithkumar ,West Godavari region ,Andhra Pradesh ,OLX… ,
× RELATED வலி நிவாரணி மாத்திரை விற்பனை: பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது