×

மாமல்லபுரம் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய ஆத்திரம்; நாட்டு துப்பாக்கியால் மகனை சுட்ட தந்தை கைது: முழங்காலில் 2 தோட்டா பாய்ந்ததால் பரபரப்பு

 

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகர் நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி மாலா (50), மகன் பிரபாகரன் (25). இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மது குடிப்பதற்கு பணம் கேட்டு தாய் மாலாவிடம் பிரபாகரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவும் இதுபோன்று மது அருந்த பணம் கேட்டு பிரபாகரன் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாலாவின் கையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த மாலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அப்பகுதியில் உள்ள பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாலாவை சேகர் உடனிருந்து கவனித்து வந்தார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு சென்றும் மாலாவிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு பிரபாகரன் வந்துள்ளார். போலீசாரை பார்த்ததும் நைசாக தப்பி வெளியே சென்றார். இந்த தகவல் சேகருக்கு தெரியவந்தது. உடனே வீட்டுக்கு சென்று, கொக்கு சுடும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து பிரபாகரனை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், முழங்காலுக்கு கீழே 2 இடங்களில் தோட்டா பாய்ந்தது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு போலீசார் ஓடி வந்து பார்த்தனர்.

அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் படுகாயம் அடைந்து கீழே சுருண்டு விழுந்து கிடந்த பிரபாகரனை மீட்டனர். பின்னர் பிரபாகரன் மற்றும் மாலாவை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மருத்துவமனை வளாகத்தில் போலீசாரை பார்த்ததும் சேகர் தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மாலாவை கத்தியால் வெட்டியதால் பிரபாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Rage ,Mamallapuram ,Buncheri ,M. G. R. Shekar ,Nagar Narikuravar ,Mala ,Prabhakaran ,
× RELATED திருவாரூர் அருகே இன்று அதிகாலை...