×

கோடம்பாக்கம் உறவினர் வீட்டில் தங்கி இருந்த 16 வயது சிறுவனுக்கு மதுவை ஊற்றி பாலியல் சீண்டல்; ஏட்டு கைது: அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 16 சிறுவனுக்கு வடபழனி தலைமைக் காவலர் மதுவை ஊற்றி பாலியல் சீண்டல் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் கடந்த 25ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் மாமா குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் குடும்பத்துடன் சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் பெரியபாளையம் அம்மன் கோயிலுக்கு சென்று வந்துள்ளனர். அதை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் 26ம் தேதி சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். ஆனால் சிறுவன் இன்னும் 2 நாட்கள் சென்னையில் தங்கி சுற்றிப்பார்த்து விட்டு ஊருக்கு வருகிறேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். எனவே, சிறுவனை மட்டும் உறவினர் வீட்டில் பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குமரேசன் தனக்கு தெரிந்த வேலப்பன் (35) என்பவரை வீட்டுக்கு அழைத்து மது அருந்தியுள்ளார். போதை அதிகமானதால் சிறிது நேரத்தில் குமரேசன் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். ஆனால் போதையில் இருந்த வேலப்பன் தனது அருகில் பேசிக்கொண்டிருந்த சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதுடன் அத்துமீறி சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டதோடு அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து வேலப்பனின் தலையில் ஓங்கி அடித்து விட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் அசோக்நகர் காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று தனக்கு நடந்த சம்பவத்தை கூறி சிறுவன் கதறி அழுதுள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலப்பனையும், போதையில் தூங்கிய குமரேசனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேலப்பன் அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பதும், வடபழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பிறகு அரசியலமைப்பு சட்டம் 311ன் கீழ் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸ்காரரே சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kodambakkam ,Chennai ,Vadapalani ,Nagercoil ,Kanyakumari district… ,
× RELATED மாமல்லபுரம் அருகே மனைவியை கத்தியால்...