தஞ்சாவூர், மே 28: தஞ்சையில் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் முதுகில் குத்தும் செயல், தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை உள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த நிலையில் தற்போது வெறும் ரூ.50,000 மட்டும் அறிவித்தது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். மேலும் மேகதாதுவில் அணை கட்டிய தீர்வும் என கர்நாடகா அரசு கூறி வரும் நிலையில் அதனை மத்திய அரசு உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
