×

மேலூர் அருகே மது அருந்தியபோது தகராறு கல்லால் அடித்து, முகத்தை சிதைத்து வாலிபர் கொலை

மேலூர்: மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள திருவாதவூர் அடுத்த வெள்ளமுத்தன் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). டிரைவரான இவருக்கு, ஒத்தக்கடையை சேர்ந்த திவ்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜ்குமார், திவ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், திவ்யா கணவருடன் கோபித்துக்கொண்டு ஒத்தக்கடையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று காலை வெள்ளமுத்தன்பட்டி முத்துமாரியம்மன் கோயில் அருகே குளியல் தொட்டி பகுதியில் ராஜ்குமார் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் கார்த்திக்ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ராஜ்குமார் நேற்றிரவு அப்பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ராஜ்குமாரை கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* குடிபோதையில் தாயை தாக்கியதால் இரும்பு கம்பியால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (47). இவரது மனைவி பூவாயி. இவரது மகன் மணிகண்டன் (21) எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வருகிறார். விவசாய கூலித்தொழிலாளியான மோகன்ராஜ், தினமும் மதுகுடித்து விட்டு மனைவி பூவாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் மோகன்ராஜ், மனைவி பூவாயி அணிந்திருந்த தாலியை பறித்துக்கொண்டு, அவர் மீது மிளகாய் பொடியை தூவி சரமாரி தாக்கியுள்ளார். அப்போது மகன் மணிகண்டன் தடுக்க முயன்றபோது அவரையும் சரமாரி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தையின் தலையில் தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Malur ,Rajkumar ,Thiruvadavur, Madurai district, Malur ,
× RELATED மாமல்லபுரம் அருகே மனைவியை கத்தியால்...