போலீசார் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

 

சிவகங்கை, மே 28: மானாமதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ்டெலிசன்(26). இவர் கடந்த மார்ச் 8ம் தேதி அன்று போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்யக் கோரி ஆகாஷ்டெலிசனின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து 80 நாட்களுக்கும் மேலாக மானாமதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆகாஷ்டெலிசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது, இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதுடன், சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

ஆனால், அந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை 60 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், 79 நாட்கள் ஆகியும் இதுவரை விசாரணை நிறைவடையவில்லை. மேலும் யாரும் கைது செய்யப்படவும் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Related Stories: