கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் பக்தர்களின் முயற்சியால் வேகமாக நிரம்புகிறது: தனியாக பைப் லைன் மூலம் தண்ணீர் வருகிறது

 

கன்னியாகுமரி, மே28: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு பகவதி அம்மன் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி சனிக்கிழமை இரவு கன்னியாகுமரி ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பகுதிகளான சானல் ரோடு ஆக்ரமிப்பு நிறைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பக்தர்கள் சார்பில் ராட்சத பைப் மூலமும், டெம்போ, லாரிகள் மூலம் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினர். கடும் சிரமத்திற்கு பிறகு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இந்த ஆண்டும் இதே நிலை நீடிக்க கூடாது என்று கருதிய பக்தர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே மாதவபுரம் அருகே உள்ள குமரிசால் குளம், விவேகானந்தபுரம் பாபநாச குளம் ஆகிய குளங்களில் இருந்து இந்து சமய அறநிலைத்துறை மற்றும் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை துறைகளின் அனுமதி பெற்று தனியாக பைப் லைன் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பலனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் விரைவாக நிரம்பி வருகிறது. பக்தர்களின் இந்த பெரும் முயற்சி காரணமாக சனிக்கிழமை இரவு கன்னியாகுமரியில் இந்த ஆண்டு தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று சிரமத்திற்குட்பட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவதால் நீதிமன்ற உத்தரவுப்படி தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் சானலில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: