×

கோயிலுக்கு வந்த ஆந்திர இளம்பெண் பலாத்காரம்; 2 போலீசார் மீதான வழக்கு விசாரணையை ஜூலைக்குள் விரைந்து முடிக்க வேண்டும்: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து தனது வளர்ப்பு தாய் மற்றும் மாமாவுடன் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், சட்டப்படி 2 மாதங்களுக்குள் விசாரணை முடிக்காததால் தனது வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் குற்றவியல் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி திருவண்ணாமலை சம்பவத்தை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்று தெரிவித்தார்.

அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளும், நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நீதிமன்றங்களின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 22ம் தேதிக்கு தள்ளிவைகப்படுகிறது. அதேசமயம், 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வேகப்படுத்த திருவண்ணாமலை நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று புரியவில்லை. எனவே, இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து ஜூலை 31ம் தேதிக்கு முடிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

Tags : Andhra Pradesh ,Tiruvannamalai Women's Court ,Chennai ,Sundar ,
× RELATED தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்தில்...