அமைச்சரவையில் சேர்க்க விஜய் மறுத்ததால் எடப்பாடியுடன் வேலுமணி அணி சமரசம்: சபாநாயகரை சந்தித்து புகாரை வாபஸ் பெற்றனர்

சென்னை: அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற ஆசையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளித்த நிலையில், அமைச்சரவையில் சேர்க்க விஜய் மறுத்ததால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்தனர். மேலும், சபாநாயகரிடம் இரு தரப்பினரும் கொடுத்த கடிதங்களை திரும்ப பெற்றுக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி, 25 அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. தங்களை தனி அணியாக அறிவிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம், சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். ஆனாலும் சபாநாயகர் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே, கட்சி தலைமை உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்த 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். அதுவும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் செல்ல எடப்பாடி அணியினர் முடிவு செய்தனர். 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் தனி அணியாக அங்கீகரிக்க முடியாது என்றும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 25 எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும் ஆபத்து உள்ளதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், தவெக அமைச்சரவையில் விஜய் சேர்க்க மறுத்ததாலும், தகுதி நீக்க நடவடிக்கைக்கு பயந்தும், எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களை தொடர்ந்து, மற்ற 15 எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி அணியுடன் சேர கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக, நேற்று மதியம் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான நத்தம் விஸ்வநாதன், காமராஜ், கே.சி.வீரமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் தங்கமணி உள்ளிட்ட அனைவரும் சென்னை பசுமை சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றனர். அங்கு எடப்பாடியை சந்தித்து பேசி, மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைவதாக உறுதி அளித்தனர்.

அப்போது, பறித்த தங்களது கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மன்னிப்பு கடிதத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதாக தகவல் வெளியானது. ஆனால், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மட்டும் எடப்பாடி வீட்டுக்கு செல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பிறகு இரு தரப்பினரும் நேற்று பிற்பகல் 1.50 மணிக்கு தலைமை செயலகம் சென்று சபாநாயர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்தனர்.

அப்போது, இபிஎஸ் அணியின் எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும், எஸ்.பி.வேலுமணி தரப்பின் எம்எல்ஏக்களான நந்தம் விஸ்வநாதன், அருண்மொழி தேவன், காமராஜ், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர், கே.பி.அன்பழகன், அரி, கே.சி.வீரமணி, லீமாரோஸ், மரகத வெற்றிவேல் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய 14 எம்எல்ஏக்கள் கூட்டாக சபாநாயகரை சந்தித்து, சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை வாபஸ் பெறுவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடுத்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.

அதேபோல் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி சார்பில், தன்னை கொறடாவாக அங்கீகரிக்க கோரிய மனுவையும் சி.விஜயபாஸ்கர் திரும்ப பெற்றார். மேலும் இரு தரப்பில் இருந்து சபாநாயகரிடம் கொடுத்த தகுதி நீக்க மனுக்களை வாபஸ் பெற்றுகொள்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். ஒரே அணியாக இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தனர். எஸ்.பி.வேலுமணி தரப்பிலிருந்து 15 எம்எல்ஏக்களில் 14 எம்எல்ஏக்கள் மட்டுமே சபாநாயகரை சந்தித்தனர். சி.வி.சண்முகம் வரவில்லை.

ஆனால் கடித்தை திரும்ப பெறுவதற்கான மனுவில் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. சபாநாயகரை சந்தித்து வெளியே வந்த அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடன் கூறியதாவது: கருத்து வேறுபாடு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம். அதனையடுத்து இரு தரப்பிலும் தகுதி நீக்க மனுக்களை அளித்தோம். இப்போது எங்கள் இரு தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்களையும் வாபஸ் பெற்றுவிட்டோம். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன.

ஆனால், அப்போதும் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். ஒரு கட்சிக்கு வெற்றி, தோல்விகள் சகஜம். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதுபோல அதிமுக நூறாண்டுகள் இருக்க வேண்டுமானால், தோல்வி குறித்து ஆராய்வதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டும். குழு அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து ஒவ்வொன்றாக செய்வதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. இப்போது எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிவிட்டது. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என பழனிசாமி எங்களிடம் கோரிக்கை விடுத்தார். பொன்விழா கண்ட கட்சி, 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்ததும் அதிமுக தான். நாங்கள் பதவிக்காக தவெகவை ஆதரிக்கவில்லை.

இதனை ஆளுங்கட்சியும் தெளிவுப்படுத்தியது. தோல்விக்கு பின்னர் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். சி.வி.சண்முகமும் எங்களுடன் தான் இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இனி ஒருங்கிணைந்த அதிமுகவாக மட்டுமே செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

* பிரச்னைக்கு வேலுமணி தான் காரணம் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் அதிமுக முக்கிய தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து சமாதானம் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்ய நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனிடையே, கட்சியின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று இபிஎஸ் விலக வேண்டும் என்பதே சி.வி.சண்முகத்தின் திட்டமாக இருந்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்காக தவெகவுக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தது வேலுமணி தான். எல்லா பிரச்னைக்கும் வேலுமணி தான் காரணம். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டால் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது உறுதி என சி.வி.சண்முகம் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

சி.வி.சண்முகத்தை சந்தித்தபின் நத்தம் விசுவநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கடிதத்தையே வடிவமைத்ததே சி.வி.சண்முகம் தான். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் எந்த பிரச்னையும் இல்லை,’’ என்றார்.

* ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், ‘‘அதிமுகவில் இரு வேறு குழுக்களாக பிரிந்து மனு வழங்கி இருக்கின்றனர். தற்போது ஏற்கனவே மனுக்களை வழங்கியவர்கள் சார்பில் மேலும் மனுக்கள் வழங்கி இருக்கின்றனர். அவற்றை எல்லாம் சரியாக படித்து ஆராய்ந்து ஆய்வு செய்து இன்று முடிவை அறிவிப்பேன். மேலும் அவர்கள் கொடுத்த மனுக்களை சரியாக படிக்க வேண்டும்.

ஏற்கனவே கொடுத்த மனுக்களையும் படித்துவிட்டு தான் முடிவை அறிவிக்க முடியும். எனக்கு மனுக்களை படிக்க கால அவகாசம் வேண்டும். ஏற்கனவே கொடுத்த மனுக்கள் ஆய்வில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் மனு கொடுத்திருக்கின்றனர். இதையெல்லாம் ஆய்வு செய்து நான் உங்களை அழைத்து முடிவை அறிவிப்பேன். ஆனால் அவர்கள் வழங்கிய மனுக்களின் விவரங்களை அவர்கள் தான் சொல்ல வேண்டும்,’’ என்றார்.

* எடப்பாடி அணியில் 42 எம்எல்ஏக்கள்
47 அதிமுக எம்எல்ஏக்களில் மரகதம் குமரவேல் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். சி.வி.சண்முகம் தனித்து விடப்பட்டுள்ளார். இந்நிலையில், இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் இணைந்ததை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 42ஆக உயர்ந்தது. தலைமைச் செயலகத்தில் ஜே.சி.டி.பிரபாகர் பெயர்களை வாசித்து எம்எல்ஏக்களின் வருகையை உறுதி செய்தார்.

Related Stories: