×

எபோலா வைரஸ் – முக கவசம் கட்டாயம் என்ற செய்தி தவறானது: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

சென்னை: எபோலா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு, மாஸ்க் கட்டாயம் என்று பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது என தமிழக பொது சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கோ மற்றும் உகண்டா உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக இந்த நாடுகளுக்கு செல்லும் பயணத்தை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாடுகளில் வசிக்ககூடிய இந்தியர்கள் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் இருக்ககூடிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.

அதேபோல் ஆப்பிரிக்காவில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகிறார்கள். எனவே இந்தியாவில் எபோலா வைரஸ் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக எபோலா காரணமாக தமிழகத்தில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற செய்தி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிற நிலையில் இது தவறான செய்தி என தமிழக பொது சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு கொரோனா தொற்றுக்கு மட்டும் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் எபோலா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 

Tags : Tamil Nadu Health Department ,Chennai ,Tamil Public Health Department ,Tamil Nadu ,Congo ,Uganda ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும்...