×

உத்தரபிரதேசத்தின் மோடி தொகுதியில் மீட்பு; 10 புடவை, ரூ.16 ஆயிரத்திற்காக 12 வயது மகளை விற்ற தாய்: 2 காமக்கொடூரன்களிடம் சிக்கி சீரழிக்கப்பட்ட அவலம்

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் 10 புடவைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகளையே தாய் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அர்வல் பகுதியைச் சேர்ந்த கவுரி தேவி என்ற தாய், தனது 12 வயது மகளை வெறும் 10 புடவைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக, உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி பகுதியைச் சேர்ந்த லஹ்ரு யாதவ் (40) என்பவரிடம் விற்றுள்ளார்.

கான்ட்ராக்டராக வேலை செய்யும் லஹ்ரு யாதவ் ஏற்கனவே முதல் மனைவி இறந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்த சிறுமியை வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார். அங்கு நான்கு மாதங்களாக சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீட்டு வேலை செய்யாத போது அவரை அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 19ம் தேதி அந்த சிறுமியை பிரதமர் மோடியின் தொகுதிக்கு உட்பட்ட வாரணாசி ரயில் நிலையத்தில் தவிக்கவிட்டுவிட்டு அவர் தப்பியோடினார்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி வர்மா, உதவி செய்வதாகக் கூறி சாரநாத் குளம் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை பகடியா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், சந்தேகமடைந்த அண்டை வீட்டார் சாரநாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு, ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

இதுகுறித்து சாரநாத் உதவி போலீஸ் கமிஷனர் விதுஷ் சக்சேனா கூறுகையில், ‘விசாரணையில் லஹ்ரு யாதவ் தன்னிடம் வேலை செய்த கவுரி தேவியிடம் 10 புடவைகள், 16 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிறுமியை வாங்கியதை ஒப்புக்கொண்டார்’ என்று தெரிவித்தார். தற்போது ஆள் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமியின் தாய் கவுரி தேவி, லஹ்ரு யாதவ், ரவி வர்மா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Uttar Pradesh ,Modi ,Varanasi ,Gauri Devi ,Arwal ,Bihar ,
× RELATED தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த...