×

ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து ஒன்பதே நாள் ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு

சென்னை: ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்த மர்ம பெண், டிஸ்சார்ஜ் ஆன நாளில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையுடன் எஸ்கேப் ஆனார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போரூர் முகலிவாக்கத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி கீதா (29). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக கடந்த 13ம் தேதி ராயபுரம் சிமென்ட்ரி சாலையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 15ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவர் ஸ்டீல் பட்டறையில் வேலை பார்ப்பதால் கீதாவிற்கு உதவியாக வர முடியவில்லை. இந்நிலையில், அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கீதாவிற்கு உதவுவதாக கூறி இருந்து வந்துள்ளார். நேற்று சிகிச்சை முடிந்து கீதாவை மருத்துவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர். குழந்தையுடன் கீதா முகலிவாக்கத்திற்கு செல்ல இருந்த நிலையில் அந்த பெண்மணி நானும் வீட்டுக்கு செல்கிறேன்.

ஆட்டோவில் செல்லலாம். போகும் வழியில் கொடுங்கையூரில் நான் இறங்கிக் கொள்கிறேன் என்று கீதாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கீதா அவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு வெளியே உள்ள டீக்கடையில் கீதாவை நிறுத்திவிட்டு, ஆட்டோவை அழைத்து வருகிறேன் என்று எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு குழந்தையுடன் சென்று உள்ளார். அப்போது ஆட்டோவை அழைத்து வருவார் என்று கீதா காத்திருந்த நிலையில், அங்கு வந்த பேருந்தில் ஏறி அந்த மர்ம பெண் குழந்தையுடன் தப்பி சென்று விட்டார்.

இதனால் தனது குழந்தையை காணவில்லை என்று கீதா மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கடத்திச் சென்ற பெண் புளியந்தோப்பு வ.உ.சி.நகர் 8வது தெருவை சேர்ந்த ரோஸி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸ் குழந்தை மீட்டனர். கடத்தப்பட்டு 5 மணி நேரத்தில் விரைவாக செயல்பட்டு குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : RSRM ,Rayapuram ,Chennai ,R. S. R. M. ,Chennai Borur ,
× RELATED சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்ல...