தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தா அதிரடி தீர்ப்பளித்துள்ளார். குற்றம் நடந்த 75 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த வழக்கில் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். தர்ம முனீஸ்வரன் உடலில் நகக்கீறல்கள் இருந்த நிலையில் மாணவியின் நகங்களில் சதைத்துணுக்குகள் இருந்தன. அந்த சதைத்துணுக்குகளின் டி.என்.ஏ.வை சோதனை செய்து தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளி முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
