வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள சோதனை சாவடியில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே, 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுடத்தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் அந்த மர்ம நபர் மீது குண்டுகள் பாய்ந்தன. படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, அந்த வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர் மீது குண்டு பாய்ந்ததாகவும், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த சமயத்தில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பணியில் இருந்தார். இதுகுறித்து அதிபரின் உதவியாளர் ஸ்டீவன் சியுங் தனது எக்ஸ் தளத்தில், ‘அதிபர் டிரம்ப் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டுவருகிறார்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நசீர் பெஸ்ட் (21) என்பது தெரியவந்துள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தன்னை இயேசு கிறிஸ்துவின் அவதாரம் என்று கூறி வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகில் வரக்கூடாது என்று இவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை மீறி நேற்று அப்பகுதிக்கு வந்த நசீர் பெஸ்ட், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார்.
இதில் அந்த வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக ரகசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில், நசீர் பெஸ்ட் பலியானார்’ என்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் எப்.பி.ஐ., இயக்குனர் காஷ் படேல் தனது எக்ஸ் தளத்தில், ‘எப்.பி.ஐ., அதிகாரிகள் சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு, பொதுமக்களுக்கு விரிவாகத் தெரிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
