சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: 187 பயணிகள் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லவேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 187 பேருடன் நேற்றிரவு 10.15 மணியளவில் புறப்பட்டு, விமானநிலைய ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 2வது முறையாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் திடீரென ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் பொறியாளர்கள் ஏறி இயந்திரக் கோளாறை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் இருந்து அந்த விமானம் நள்ளிரவு 11.30 மணியளவில் கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து 187 பேருடன் கொல்கத்தாவுக்கு நள்ளிரவு 11.50 மணியளவில் புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 3வது முறையாக மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது.அதைப்போல் நள்ளிரவு 11.50 மணிக்கு, மீண்டும் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில், மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் மீண்டும் பொறியாளர்கள் ஏறி, இயந்திரக் கோளாறு தொடர்பாக பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். இச்சமயங்களில் அனைத்து பயணிகளும் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டு இருந்ததால் பெரிதும் அவதிப்பட்டனர்.

சென்னையில் இருந்து அந்த விமானத்தில் தொடர் இயந்திரக் கோளாறு காரணமாக கொல்கத்தா செல்ல வேண்டிய பலமணி நேரம் காத்திருந்ததில் ஆத்திரமான பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமானநிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான பயணிகள், தங்களின் கொல்கத்தா பயணத்தை ரத்து செய்துவிட்டோ, பயண தேதிகளை மாற்றிக் கொண்டோ விமான நிலையத்தில் இருந்து தங்களின் வீடுகளுக்குப் புறப்பட்டு சென்றனர். எனினும், வெளியூர்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமானநிலைய ஓய்வறைகளில் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

நேற்றிரவு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பழுது பார்க்கப்பட்டு, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து நேற்றிரவு கொல்கத்தா செல்ல வேண்டிய பயணிகள், சென்னை விமானநிலையத்தில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக தவித்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே சென்னையில் இருந்து நேற்றிரவு கொல்கத்தா புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்ததால், அந்த விமானம் விபத்திலிருந்து தப்பித்து, அதில் செல்லவிருந்த 180 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 187 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Related Stories: