ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியார்பட்டி ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. வரவிருக்கும் மே 28 அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது ஆடுகள், மாடுகள் பலியிடப்படுவது வழக்கமான ஒன்று. இதனையொட்டி தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடிக்கும் மேலான மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த ஆட்டு சந்தையில் இன்று அதிகாலை முதலே தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் ரெட்டியார்பட்டி ஆட்டுச்சந்தைக்கு படையெடுத்து வந்தனர்.
ரெட்டியார்பட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் தரம் மற்றும் எடைக்கு ஏற்ப ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிற்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த பிரம்மாண்ட வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அண்டை மாநிலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்ததால் ரெட்டியார்பட்டி ஆட்டு சந்தை களைகட்டியது. இந்த அதிரடி விற்பனையால் ஆடு வளர்ப்போரும், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
