சென்னை: அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு தான் உள்ளது. பதவிக்கு ஆசைப்பட்டு விஜய்க்கு ஆதரவு கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.இதுகுறித்து சென்னையில் அவர் கூறியதாவது: தற்போது, அதிமுகவில் பிளவு என ஊடகங்கள் கூறிவருகின்றன. நாங்கள் பிளவுபடவில்லை, எங்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு உள்ளது. அதனை சரி செய்ய பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்று தான் கோரிக்கை வைத்து வருகிறோம். இப்போதும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர். நாங்கள் எங்களின் தோல்வி குறித்து ஆராய வேண்டும். தவெகவிற்கு ஆதரவு அளித்ததற்கு தொடர்ந்து தவறான தோற்றத்தை கட்டமைத்து வருகின்றனர். சிலர் பதவிக்காக சென்றுவிட்டதாக விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இந்த தவறான எண்ணத்தை பரப்ப பெரிய டீம் ஒர்க் நடந்து வருகிறது.
இதற்கு ஆளுங்கட்சி தரப்பிலும், எங்கள் தரப்பிலும் விளக்கம் கொடுத்துவிட்டோம். ஆனால், தொடர்ந்து இந்த விஷயங்கள் பரப்பப்படுகின்றன. தவறான எண்ணத்தை பரப்பி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். சட்டமன்றத்தில் ஆதரவு அளித்தது பதவிக்காக ஆசைப்பட்டு கொடுக்கவில்லை. பதவி கேட்டோம் என்பது முற்றிலும் தவறானது. நாங்கள் முதல்வரை சந்தித்து பேசும்போது எங்கள் ஆட்சியில் தொடர்ந்த திட்டங்களை தொடர புக்-லெட் தயார் செய்து கொடுத்தோம். அதில், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணி, குடிமராத்து பணி திட்டம், அம்மா குடிநீர் போன்ற திட்டங்கள் தொடர வலியுறுத்தினோம். கட்சியினருடன் ஆலோசனை நடத்தி பொதுக்குழு கூட்ட எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பாடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
