புதுடெல்லி: பத்து மாநிலங்களில் காலியாகும் 24 மாநிலங்களவை இடங்களுக்கும், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தலா ஒரு காலியிடத்திற்கும் வரும் ஜூன்18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசம் (4), குஜராத் (4), ஜார்கண்ட் (2), மத்தியப் பிரதேசம் (3), மணிப்பூர் (1), மேகாலயா (1), ராஜஸ்தான் (3), அருணாச்சலப் பிரதேசம் (1), கர்நாடகா (4), மிசோரம் (1) ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசின் எம்பியாக இருந்து துணை முதல்வராக பதவியேற்ற சுனேத்ரா அஜித் பவார் மற்றும் அதிமுக எம்பியாக இருந்த சி.வி.சண்முகம், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால், மேற்கண்ட இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களுக்காக இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. ஜூன் 8ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஜூன் 9ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், ஜூன் 11ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூன் 20ம் தேதிக்குள் தேர்தல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு பெறும். இந்த தேர்தலில் வாக்குச்சீட்டில் விருப்பங்களை பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கும் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களின் எம்எல்ஏக்கள், மேற்பட 26 எம்பிக்களை தேர்வு செய்வதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
