- Visika
- IUML கட்சி
- தவேக ஊராட்சி
- வன்னி அரசு
- ஷ்ஜஹ்ஹ்ன்
- கவர்னர்
- ஆர்லெகர்
- சென்னை
- தவேகா ஊராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
சென்னை: தவெக அரசில் அமைச்சர்களாக விசிக-வை சேர்ந்த வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஆகியோர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 21 தவெக எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 பேர் பதவியேற்றனர். தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் திமுக கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு எம்எல்ஏ இடம்பெறுவார் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று இரவு அறிவித்தார். இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘‘தவெக அமைச்சரவையில் விசிக சேரும்’’ என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் எம்பியுமான நவாஸ் கனி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார்கள். அப்போது, தவெக அமைச்சரவையில் தங்கள் கட்சி பங்கேற்பதற்கான கடிதத்தை வழங்கினர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான் ஆகியோர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிய அமைச்சர்களாக இன்று காலை 9.30 பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக ஆளுநர் அர்லேகர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான்(பாபநாசம்) சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு(திண்டிவனம்) சமூகநீதித் துறை அமைச்சராகவும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம் சார்ந்த விவகாரங்களை அமைச்சர் வன்னி அரசு கவனிப்பார். அமைச்சர் ஷாஜகானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் ஆகியவை வரும். முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முதல்வர் மற்றும் 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
