×

தவெக அமைச்சரவையில் பங்கேற்பு விசிக ஐயூஎம்எல் கட்சிகள் மீது ஆ.ராசா கடும் தாக்கு: சமூக வலைதளங்களில் தொண்டர்கள் மோதல்

 

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் பங்கேற்றுள்ள நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் திமுக விசிக தொண்டர்கள் எதிர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. இருந்தபோதிலும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10ம் தேதி தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தன. தொடர்ந்து, தவெக சார்பில் விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் பங்குபெற வேண்டும் எனச் சில நாள்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது. அது குறித்து கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்வதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

இந்நிலையில் நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அப்போது, தவெகவைச் சேர்ந்த 21 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விசிக மற்றும் ஐயூஎம்எல் சார்பில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று பதவியேற்கவில்லை. தொடர்ந்து, நேற்று மதியம் ஐயூஎம்எல் கட்சி அமைச்சரவையில் பங்கேற்கும் என்பதற்கான கடிதத்தை வழங்கினார்கள். அதேபோல், நேற்று இரவு விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் விசிக அமைச்சரவையில் பங்கேற்கும் என அறிவித்தார். தொடர்ந்து இன்று காலை விசிக சார்பில் வன்னி அரசும், ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகானும் அமைச்சராகப் பதவியேற்றனர். இந்தச் சூழலில் நேற்று இரவு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தனது சமூக வலைதளப்பக்கத்தில் விசிக மற்றும் ஐயூஎம்எலை விமர்சிக்கும் விதமாக வெளியிட்ட பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்தப் பதிவில்,’’முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘‘அதிகாரம் எளியவர்க்கு, அதிலென்ன ஆத்திரம், ஆற்றாமையால் அள்ளிவீசும், அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது, அநாகரீகம் தவிர்க்கவே, அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால், அணைக்க முடியா, அனலில் தகித்து போவீர்’’ எனப் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், ஆ.ராசா நேற்று இரவு அவர் வெளியிட்டிருந்த பதிவு சர்ச்சைக்குள்ளான நிலையில், அதை நீக்கிவிட்டு வேறு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில், அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!’’ எனப் பதிவிட்டுள்ளார். அதனால், தற்போது திமுக மற்றும் விசிக தொண்டர்களியே சமூக வலைதளத்தில் மோதல் அதிகரித்துள்ளது.

 

Tags : Cabinet of Ministers ,IUML ,Raza ,Chennai ,Visika ,Daveka Cabinet ,Dimuka ,Deputy Secretary General ,A. Raza ,Dimuka Visica ,Taweka 108 ,Tamil Nadu Assembly Election ,
× RELATED நாட்டில் நடைபெறும் சட்டவிரோத...