சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக இணைவதால் வன்னிஅரசு அமைச்சராகிறார் என திருமாவளவன் அறிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற தவெக தரப்பில் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. கூட்டணி ஆட்சி முறையை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என முதலில் முன்மொழிந்தது விசிகதான். விசிக முன்மொழிந்த ஆட்சியில் பங்கு. அதிகாரத்தில் பங்கு தற்போது நிறைவேறியுள்ளது என திருமாவளவன் கூறினார்.
இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
அமைச்சரவையில் இடம்பெற த.வெ.க. தரப்பில் ஆதவர் அர்ஜுனா வெளிப்படையான அழைப்பை முன்வைத்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 2 கட்சிகளும் த.வெ.க. தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவேண்டும் என்ற வெளிப்படையான அழைப்பை அடுத்து கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்தாய்வு செய்தோம்.
பெரும்பாலானோரின் கருத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். வன்னி அரசு, ஜோதிமணி ஆகிய 2 சட்டமன்ற உறுப்பினர்களில் வன்னி அரசு பெயரை அமைச்சராக பரிந்துரைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
