×

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் சிவகாமி அம்பாள் உடனுறை திருத்தளிநாதர் சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, திருத்தளிநாதரும், சிவகாமி அம்பாளும் கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 7.40 மணியளவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. இரவில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை சுவாமி தினமும் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் 5ம் நாளான மே 25ம் தேதி காலை 7.15 மணியளவில் அம்மன் தவத்திற்கு எழுந்தருளுவார். பின்னர் 9 மணி முதல் 10.15 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

விழாவின் 9ம் நாளான மே 29ம் தேதி காலை 5.10 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஐம்பெரும் கடவுளர் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.35 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 30ம் தேதி காலை 11 மணிக்கு திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் எழுந்தருள, தெப்பத்திருவிழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Vaikasi Visakha festival ,Tiruputhur Tiruthalinathar temple ,Tiruputhur ,Sivaganga district ,Sivagami ,Ambal Udanurai Tiruthalinathar Swamy temple ,Vaikasi festival ,
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும்...