×

வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும் கூட்டம், கூட்டமாக திரியும் தெரு நாய்கள்: சிறுவனை துரத்தியதால் பரபரப்பு

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையம் உள்பட மாநகரில் மீண்டும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கி உள்ளன. ஆகவே இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாய் கடி பிரச்னை நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்களின் உயிர்களை தெரு நாய்கள் பதம் பார்க்கின்றன. நாய் கடிக்கும் உள்ளாகும் நபர்கள், ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழக்கும் பரிதாபகரமான நிலை உள்ளது. நாடு முழுவதும் நிகழ்ந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தெரு நாய் கடி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான, அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் அதே இடத்தில் நாய்களை விட வேண்டும் என்ற விலங்குகள் நல ஆர்வலர்களின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அவற்றால் பொதுமக்கள் கடிபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குமரி மாவட்டத்திலும் வருடத்துக்கு 30 ஆயிரம் பேர் வரை நாய் கடியால் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. நகரப் பகுதிகள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் தெரு நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், சிறுமிகளை இந்த நாய்கள் துரத்தித் துரத்திக் கடிக்கின்றன. நாய் துரத்தியதால் இருசக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும், கடுமையான நாய் கடிக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும், சில நாய்களிடம் ரேபிஸ் (வெறிநாய் கடி) போன்ற நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், மேற்கொள்ளப்படும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (அனிமல் பெர்த் கண்ட்ரோல்) திட்டங்கள் பல இடங்களில் தொய்வடைந்துள்ளன. நாகர்கோவிலில் ஏபிசி சென்டர் இயங்கி வருகிறது.

ஆனால் இவை முடங்கி உள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த தெரு நாய்களை கடந்த சில நாட்களுக்கு முன், மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். ஆனாலும் நாய்கள் தொல்லை குறைய வில்லை. நேற்று காலையிலும் கூட்டம், கூட்டமாக வடசேரி பஸ் நிலையத்தில் நாய்கள் சுற்றி திரிந்தன.

இதில் நேற்று காலை சிறுவன் ஒருவனை நாய் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக கட்டண கழிவறைக்குள் நுழைந்து அந்த சிறுவன் தப்பினான். பஸ் நிலையம் மட்டுமின்றி தெருக்களிலும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பு உள்ளதால், அதை பின்பற்றி தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இறைச்சி கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துப் பகுதிகளிலும் விடுபடாமல் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். வீதிகளில் இறைச்சிக் கழிவுகளையும் உணவுகளையும் கொட்டுபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆக்ரோஷமான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடித்து பராமரிக்கத் தனிப் பராமரிப்பு மையங்கள், காப்பகங்களை அதிகப்படுத்த வேண்டும். நாய்கள் மீதான கருணை ஒருபுறமிருந்தாலும், மனிதர்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனர்.

Tags : Vadaseri ,station ,NAGARGO ,VADASHERI BUS STATION ,
× RELATED கோயில் திருவிழாவில் 100 கிடாக்கள் 150...