திருப்பூர்: திருப்பூர் அருகே கிணற்றில் விழுந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் முருகம்பாளையம் பூந்தோட்டம் பகுதியில் பனியன் நிறுவன வளாகத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்ததால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர்.
அப்போது அந்த கிணற்றில் 20 அடி ஆழ தண்ணீரில் விழுந்த ஆந்தை ஒன்று வெளியேற முடியாமல் தத்தளித்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆந்தையை மீட்டனர். பின்னர் அதனை பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த ஆந்தை, இந்திய கழுகு ஆந்தை என்ற அரிய வகையை சேர்ந்ததாகும். இதற்கு வங்காள கழுகு ஆந்தை அல்லது பாறை கழுகு ஆந்தை என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் தலையில் கொம்புகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளது.
பாறைப்பகுதிகள், புதர்காடுகள் மற்றும் விவசாய நிலங்களில் இவ்வகை ஆந்தைகள் வசிக்கின்றன. தற்போது மீட்கப்பட்டுள்ள ஆந்தைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் உடல்நிலை சீரானதுடன் அதை நஞ்சராயன்குளம் பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
