×

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மே 31 வரை வெயில் கடுமையாகவே இருக்கும் – தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் என்று குறிப்பிடப்படும் பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவவில்லை. மாறாக சென்னை முதல் வேலூர் வரையிலான பகுதிகளில் இன்று மீண்டும் ஒரு மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது என்று தனது சோஷியல் மீடியா பதிவில் கூறி இருக்கிறார்.

அந்த பதிவில் குறிப்பாக சென்னை உட்பகுதிகள் முதல் வேலூர் வரையிலான சில இடங்களில் வெப்பநிலை 41 முதல் 42.5 டிகிரி வரை உயர்ந்து தகித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் வேலூர், சென்னை விமான நிலையம் அமைந்துள்ள பகுதியான மீனம்பாக்கம் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும் கூறியுள்ளார்.

சென்னை முதல் வேலூர் வரையிலான மண்டலங்களில் மட்டுமே மக்களை மிகவும் அவதிக்குள்ளாக்கும் வாட்டி வதைக்கும் வெப்பம் நிலவுகிறது. வரும் மே 30 அல்லது 31-ஆம் தேதி வரை இதே போன்ற கடுமையான வெப்ப நிலை தொடரும்; அதன் பிறகே வெப்பநிலை படிப்படியாக குறையும். இன்று இரவு பெங்களூரு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் கொடைக்கானல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை அல்லது புயல் போன்ற வானிலை நிலவ வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையில் சில பகுதிகளில் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Tamil Nadu Weatherman ,Pradeep John ,Tamil Nadu ,Weatherman ,Vellore ,
× RELATED ‘முதல்வரிடம் தெரிவித்துவிடுவேன்’ என...