×

சோஷியல் மீடியாக்கள் கோலோச்சும் டிஜிட்டல் யுகம்.! பெரியார் சொன்ன பகுத்தறிவு இப்போது இன்னும் அவசியம்… எம்.பி கனிமொழி

கோவை: சோஷியல் மீடியாவில் வரும் தகவல்களை அப்படியே நம்ப வேண்டாம் என்பது தான் பெரியார் சொன்ன பகுத்தறிவு என்று திமுக எம்.பி கனிமொழி பேசி உள்ளார். கோவையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற எம்.பி கனிமொழி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பாமல், புத்தகத்தில் எழுதி இருப்பதை கூட நம்பாமல் உன் புத்திக்கு, பொது அறிவுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டும் ஏற்றுக்கொள் என பகுத்தறிவு பற்றி பெரியார் சொல்லி இருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி தற்காலத்தில் நாம் நம்பக்கூடாது ஒன்று இருக்கிறது என்றால் அது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியாக்கள் தான். இவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தி மாற்றம் என்ற பெயரில் என்னென்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது நமக்கு தெரிகிறது. ஆனால் நான் இங்கே சோஷியல் மீடியாக்களின் தாக்கம் பற்றி குறிப்பிடுவது அரசியலையும் தாண்டியது.

உதாரணமாக உடல்நலன் சார்ந்த விஷயங்கள், குடும்பம் ஒழுங்காக நடத்துவது, பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என பல விஷயங்களை பற்றி இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் பலரும் அட்வைஸ் சொல்வார்கள். எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதை பற்றியெல்லாம் கூட அறிவுரைகள் உலா வருகின்றன.

ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் சரியான தகவல்களின் காலத்துடன் ஒப்பிட்டால் தவறான தகவல்களின் காலம் என்பதில் தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் ஒருகருத்தை நம்ப முடிவு செய்துவிட்டால் அதை சொல்பவர் யார், அவர்களின் தகுதி என்ன என்று சிந்தித்து செயல்பட வேண்டிய சூழல் இருக்கிறது. சரியான விஷயங்கள் மற்றும் தகவல்கள் எது.! அதே நேரம் தவறான தகவல்கள் எது என்பதை தெரிந்து கொள்ளவே பகுத்தறிவு வேண்டும் என்று தந்தை பெரியார் அன்றே சொல்லிவிட்டு சென்றார்.

அதே போல செயற்கை நுண்ணறிவு செயலிகளில் கேட்கும் கேள்விகளுக்கும் கூட எல்லா நேரங்களிலும் சரியான பதில் வராது. நீ கூறும் தகவல் தவறு என்று நாம் சொன்னால் மன்னிக்கவும், எனக்கு இந்த தகவல் தெரியாது என்று பதில் வருகிறது. எனவே இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் நம்பும் ஒன்று உண்மையில் சரியா அல்லது தவறா என்று சரிபார்த்து முடிவெடுக்க நிச்சயம் பகுத்தறிவு தேவை என்று கனிமொழி கூறினார்.

 

Tags : Periyar ,NIMBLE ,Govai ,Dimuka M. ,Peryaar ,Goa ,M. ,B Kanimozhi ,
× RELATED காரைக்கால் – பேரளம் இடையே 40...