×

காலையில் டெண்டர்; மாலையில் பணிஆணை: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சென்னை: காலையில் டெண்டர் விடப்பட்டு, மாலையில் பணி ஆணை வழங்கப்பட்ட விவகாரத்தில் ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்கள் இரண்டு பேர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி துறையில் நேற்று ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. அதாவது காலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அன்று மாலையே டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் பணி ஆர்டர் வழங்கப்பட்ட சம்பவம்தான் நேற்று தமிழகம் முழுவதும் சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக உருவாகியது.

அதாவது காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு இ-டெண்டர் வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கம் தொட்டி கட்டுமான பணிக்காக ரூ.16 லட்சத்து, 83 ஆயிரத்து 194 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது. இதில் அடுத்து நடந்ததுதான் சுவாரஸ்யம். அதாவது, 19ம் தேதி (நேற்று) காலை 9 மணிக்கு டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியானது. நேற்று மாலை 3 மணிக்குள் டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று மாலை 4 மணிக்கு டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, டெண்டர் பணிகள் அனைத்தும் 6 மணி நேரத்துக்குள் முடிவடையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த டெண்டர் தொடர்பான தகவல்கள் எதுவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இதுபோன்ற டெண்டர் தமிழக அரசால் கோரப்படுவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று ஊரக உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் புஸ்சி ஆனந்த். அவரது துறை மூலமே இந்த டெண்டர் கோரப்பட்டு இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், புஸ்சி ஆனந்த் அமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று 2 நாள் தான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு அதிசய டெண்டர் வழங்கி மக்களை ஆச்சரியப்படுத்தி இருந்தனர்.

இதுபற்றிய தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த டெண்டர் நேற்று உடனடியாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் உத்தரவிட்டார். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதியில் 2025-26ம் ஆண்டிற்கான 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான ஆன்லைன் டெண்டர் விடப்பட்டன.

இந்த டெண்டர் விடப்பட்ட சில மணி நேரத்திலேயே மூடப்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் இடையே சர்ச்சை எழுந்தன. விசாரணையை அடுத்து தற்போது வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கயல்விழி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Regional Development Office ,Chennai ,Rural Local Government Department ,Tamil Nadu ,
× RELATED காரைக்கால் – பேரளம் இடையே 40...