×

ரூ.70 கோடி பணமோசடி வழக்கு மகாராஷ்டிரா போலி சாமியார் கைது

 

மும்பை: பெண் ஒருவரை மிரட்டி 3 ஆண்டாக பலாத்காரம் செய்த புகாரில் அடந்த மார்ச் 18ம் தேதியன்று கைது செய்யப்பட்டவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த போலி சாமியார் அசோக் கராத். பின்னர் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன. ஏராளமான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் கராத் ஈடுபட்டது அம்பலமானது.

இது பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் சுரண்டல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக தற்போது வரை கராத் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னை நாடி வரும் பக்தர்களை மிரட்டி பணம் பறிப்பது, அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சமதா நகரி கூட்டுறவு கடன் சங்கத்தில் பினாமிகளின் ஆவணங்களை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல், ஒரே நாளில் 60 வங்கிக் கணக்குகளை தொடங்கி ரூ.70 கோடிக்கும் மேலாக பண மோசடியில் கராத் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நாசிக் போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 6ம் தேதியன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், நாசிக் சிறப்பு நீதிமன்றத்தில் கராத், நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி நேற்று பிற்பகலில், கட்டாய நடைமுறைகளை முடித்த பின்னர் அமலாக்கத்துறை கராத்தை முறைப்படி கைது செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கராத் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது இந்த வழக்கு விசாரணைக்காக கராத்தை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரும் எனத் தெரிகிறது.

Tags : Maharashtra ,Sameer ,MUMBAI ,SAMIAR ASHOK KARAT ,STATE ,
× RELATED உத்தரகாண்ட் மாஜி முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்