லுாதியானா: பிரபல பஞ்சாப் பாடகி 6 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பஞ்சாப் மாநிலத்தை ேசர்ந்த பிரபல பாடகி இந்தர் கவுர். வயது 29. ஆக்கட், ஜிஜா, சோனா லக்டா, ரிச் ஸ்டாண்டர்ட், கடோன் துன் மிலெங்கி, சன்ரூப் உள்ளிட்ட பல பாடல்களை கவுர் பாடியுள்ளார். பாடகர் கிப்பி கிரேவாலுடன் இணைந்து சோனே தி வாங் என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் சுமார் 1.24 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட6 நாட்களுக்குப் பிறகு, லூதியானாவில் இந்தர் கவுர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நீலோன் கால்வாய் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. குடும்பத்தினர் உடலை அடையாளம் காட்டிய பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக சம்ராலா அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அது கொண்டு செல்லப்பட்டது.
இந்த கொலையில் அவரது ஒரு தலை காதலன் சுக்விந்தர் சிங், அவரது தந்தை பிரீதம் சிங் மற்றும் நண்பர் கரம்ஜித் சிங் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுக்விந்தர், கனடாவில் வசித்து வந்தார். ஏற்கனவே திருமணமானவர் என்ற போதிலும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு இந்தர் கவுரை அவர் வற்புறுத்தி வந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், சுக்விந்தர் அப்பாடகியைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது உடலையும் காரையும் கால்வாயில் வீசிவிட்டு கனடாவிற்குத் தப்பிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சுக்விந்தரின் தந்தை பிரீதம் சிங் மற்றும் அவரது நண்பர் கரம்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இக்குற்றத்தைச் சதித்திட்டம் தீட்டி அரங்கேற்றியதாகக் கருதப்படும் சுக்விந்தர், நேபாளம் வழியாக மீண்டும் கனடாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அந்த அதிகாரி கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதும், ஆனால் சுக்விந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதைக் கேள்விப்பட்ட பிறகு, அவரைத் திருமணம் செய்துகொள்ள கவுர் மறுத்துவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தர் கவுரின் பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
