×

இந்தியாவை பொருளாதார புயல் நெருங்குகிறது: ராகுல் காந்தி எச்சரிக்கை

 

ரேபரேலி: இந்தியாவை பொருளாதார புயல் நெருங்குகிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கலந்து கொண்டார்.  அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘தற்போதைய அரசு மாற்றப்படும் வரை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறும், மின்சார வாகனங்களுக்கு மாறுமாறும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் மோடி வலியுறுத்துகிறார். ஆனால் அவ்வாறு கூறிய உடனேயே அவரே ஒரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ஒரு கடுமையான பொருளாதார புயல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. நமது வாழ்நாளில் நம் இதுவரை அனுபவத்திராத ஒரு புயல் அது. இதனால் பாதிக்கப்படப்போவது யார்? அம்பானியோ அல்லது அதானியோ அல்ல. வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் இந்தியாவின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினர் தான் பாதிக்கப்பட போகிறார்கள். பெட்ரோல் விலை உயரப்போகிறது. பணவீக்கம் விண்ணைத் தொடும் அளவுக்கு எகிறப் போகிறது.

ஆனால் அவர்களோ எதையும் செய்வதாக இல்லை. தொழிலாளர்களையும் சிறு வணிகர்களையும் பாதுகாக்கத் தொடங்குமாறு நாங்கள் பிரதமரிடம் நாளுக்கு நாள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ஆனாலும் அவர் என்ன செய்கிறார்? அவர் நார்வேக்கு விமானத்தில் பறந்து செல்கிறார்.

அங்கே நார்வேயில் இருந்துகொண்டு சகோதரரே அதானிக்கு உதவுங்கள், அம்பானிக்கு உதவுங்கள் என்று கூறுகிறார். உங்களின் பணம் முழுமையும் அதானி, அம்பானியின் பைகளுக்குள் சென்று சேரும். நாங்கள் உறுதியாக உங்கள் பக்கமே நிற்கிறோம். நீங்கள் எங்கு விரும்பினாலும், உங்களுக்கு எப்போது நான் தேவைப்பட்டாலும் நீங்கள் என்னை அழைக்கலாம்” என்றார். மேலும் ராகுல் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மோடி அவர்களே அதானியை தங்கள் ஓய்வூதிய நிதியின் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு நீங்கள் விடுத்த தனிப்பட்ட கோரிக்கைக்கு நார்வே ஒப்புக்கொண்டதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Tags : India ,Rahul Gandhi ,Rae Bareli ,Lok Sabha ,Rae Bareli, Uttar Pradesh ,
× RELATED உத்தரகாண்ட் மாஜி முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்