திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டுவரப்படும் என்று காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இதை அறிவித்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் வி.டி சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஜூன் 15ம் தேதி முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் அமலுக்கு வரும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியது: அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் மாநிலத்தில் தனியார் பஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே நாங்கள் கடும் நஷ்டத்தில் தொழில் நடத்தி வருகிறோம். உதிரி பாகங்கள், பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வரி, பெர்மிட் கட்டணம் போன்றவை மிக அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
