சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தேர்வுகள் நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 82,806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணாநூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் உடனுக்குடன் பள்ளி மாணவர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தவிரவும், தேர்வுத்துறையின் இணைய தளத்திலும், வெளியிடப்படுவதுடன், அனைத்து பள்ளிகளிலும் காலை 10 மணி அளவில் பள்ளி மாணவ மாணவியர் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.degilocker.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உள்ளீடு செய்து அதன் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் தொடர்பான சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ெதரிவிக்கலாம்.
