தவெகவினரிடமிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ரீல்ஸ் மோகம்; தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் அறையில் ரீல்ஸ் எடுத்து அலப்பறை: சமூக வலைதளங்களில் விமர்சனம்

 

சென்னை: தவெகவினரிடமிருந்த ரீல்ஸ் மோகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து அரசு அலுவலர் ஒருவர் தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் அறையில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்தது முதல் எல்லா இடங்களிலும் ரீல்ஸ் எடுத்து கடும்விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலான செயல்களில் தவெவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தவெக ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல் ரியல் ஆட்சி நடத்தவேண்டும் என எதிர்கட்சியினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

குறிப்பாக, தவெக அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ரீல்ஸ் எடுத்துப் பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. அதிலும் சில நாள்களுக்கு முன்னர் தவெக சட்டமன்ற உறுப்பினர் நிறுவனம் ஒன்றியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பார்வையிடச் சென்றதை ரீல்ஸாக எடுத்து அதை மாஸ் பாடலுடன் இணைத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சில நாள்களுக்கு முன்னர் தலைமைச் செயலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அறையில் அவரது நாற்காலியில் அவரது நண்பர்கள் புகைப்படம் எடுத்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தவெகவினரிடம் இருந்த ரீல்ஸ் மோகம் அரசு அலுவலர்களிடமும் பரவி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. நேற்று, தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல்வர் அறையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதையும் பொருட்படுத்தாத அரசு அலுவலர் ஒருவர் முதல்வர் முன்னிலையில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் முதல்வர் அறையில் அதிகாரிகளோ அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ இதுபோல ரீல்ஸ் எடுக்கும் செயல் நடைபெற்றதில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Related Stories: