சென்னை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் நடைபெற்றது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு பக்தர்கள் கூட்டம் வந்ததால், மேல்மலையனூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இந்த கூட்டத்ததை பயன்படுத்தி, 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போனதாக போலீசில் புகார் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (55) என்பவரிடம் மர்ம நபர் செல்போனை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து தடுத்த முத்துகிருஷ்ணனை மர்ம நபர் கத்தியால் அவரது தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பி விட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், வானூர் தாலுகா கொல்லாமூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் முகத்தில் மர்ம நபர் கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடர்கள் அதிக அளவு மேல்மலையனூர் பகுதியில் பக்தர்களிடம் செல்போன் மற்றும் நகைகளை திருடி வரும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் அச்சத்துடன் வந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வெண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
