சென்னை: மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனைவியின் கண்முன்னே கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவளம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராமம், சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்மணி (38). இவர் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள தனியார் நிறுவன மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சவுந்தர்யா (33) என்பவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, பைக்கில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கோவளம் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து தம்பதி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இ.சி.ஆர். சாலை கோவளம் டோல்கேட் அருகே வந்தபோது அவர்கள் பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் தமிழ்மணி, அவரது மனைவி சவுந்தர்யா ஆகிய இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தமிழ்மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்ட்டது. சவுந்தர்யாவிற்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதில், தமிழ்மணி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சவுந்தர்யா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தமிழ்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
