திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பலவீனமான மின்கம்பங்களால் மழை, காற்றுக்கு கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெருவில் மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் கான்கிரீட் கம்பங்கள் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் லேசாக காற்று அடித்தாலும் மொத்த டிரான்ஸ்பார்மரும் தள்ளாடுவதால் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் பீதி அடைகின்றனர். இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மின்வாரிய துறைக்கு பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
ஆனால் அதை சீரமைக்காமல் விரிசலான அந்த கான்கிரீட் கம்பங்களை கம்பி போட்டு கட்டி வைத்துள்ளனர். வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்லக்கூடிய சாலை, மட்டுமின்றி அடிக்கடி இந்த வழியாக சவ ஊர்வலங்கள் செல்வதால் டிரான்ஸ்பார்மர் முறிந்து கீழே விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும். எனவே உடனடியாக டிரான்ஸ்பார்மர் கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் அதிகமாக நடமாடக்கூடிய அப்பர் சாமி கோயில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் பல மாதங்களாக பழுதாகி லேசான காற்று அடித்தாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால் பல்வேறு காரணங்களை கூறி மின்வாரியம் சீரமைக்க முன்வரவில்லை. தற்போது திடீரென்று மழை பெய்வதும் காற்றடிப்பதுமாக இருப்பதால் டிரான்ஸ்பார்மர் எப்பொழுது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது விழக்கூடிய அபாயம் உள்ளது. எனவே இனியும் காலம் கடத்தாமல் மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
* ஊழியர்கள் பற்றாக்குறை
தண்டையார்பேட்டை மின் கோட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், ஜோதி நகர், மணலி புதுநகர், மணலி போன்ற இடங்களில் உள்ள பல மின்வாரிய பிரிவுகளில் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இடமாற்றம் செய்தவர்கள், உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு பதிலாக புதியதாக ஆட்களை நியமிக்காமல் காலியாக இருப்பதால் அந்த பணிகளையும் கூடுதலாக சேர்ந்து பார்ப்பதால் மின்வாரிய ஊழியர்களுக்கு பெரும் மன உளைச்சலும், சிரமமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் மின்தடை ஏற்பட்டால் ஊழியர்கள் பற்றாக்குறையால் அதை சரி செய்ய சுமார் ஐந்து மணி நேரம் ஆகிறது. இம்ப்ரூவ்மெண்ட் எனக்கூடிய புதிய டிரான்ஸ்பார்மர்கள், கான்கிரீட் மின் கம்பங்கள் தயாராக இருந்தும் போதிய ஊழியர்கள் இல்லாததால் பொருத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தண்டையார்பேட்டை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மின் பிரிவிலும் ஆய்வு செய்து காலியாக உள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
