குன்னூர்: குன்னூர் மலைரயில் பாதையில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் ‘ப்ரீ-வெடிங்’ போட்டோஷூட் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான பாரம்பரியமிக்க மலை ரயில் பாதைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவு செய்யவும் வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் ரயில்கள் வரும்போது ஏற்படும் ஆபத்துகளை தடுக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தடையை மீறி சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சில புகைப்படக் கலைஞர்கள் புதுமணத் தம்பதிகளை வைத்து ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் போட்டோஷூட் நடத்தி வருவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று குன்னூர்- ஊட்டி இடையே உள்ள மலை ரயில் பாதையில் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் சிலர், புதுமணத் தம்பதிகளை வரவழைத்து தடையை மீறி ரயில்வே தண்டவாளத்தின் அருகில் வைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
அதிக அளவிலான ‘ஷேர்’ மற்றும் ‘லைக்குகளை’ பெறுவதற்கும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்பதற்குமே இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனவே, விதிமுறையை மீறும் புகைப்படக் கலைஞர்கள் மீது ரயில்வே போலீசாரும், வனத்துறையினரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
