புதுடெல்லி: சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களை, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்காக இணையவழியில் தாக்கல் செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. வருமான வரித்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்ஸல் மற்றும் ஆன்லைன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தகுதியுள்ள வரி செலுத்துவோர் இப்போது தங்களின் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து, விவரங்களைச் சரிபார்த்துத் தாக்கல் செய்யத் தொடங்கலாம். தனிநபர்களுக்கு (ஐடிஆர்-1) வரித் தாக்கல் செய்ய ஜூலை 31, கடைசித் தேதியாகும். அதே சமயம் ஐடிஆர்-4 படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி படிவம் 1 மற்றும் வருமான வரி படிவம் 4 ஆகியவை அதிக எண்ணிக்கையிலான சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு ஏற்ற எளிமையான படிவங்களாகும்.2025-26 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான இந்த படிவங்கள் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டன. தற்போது இணையவழித் தாக்கல் மற்றும் எக்ஸல் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் இனி எளிதில் வரி தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
