புதுடெல்லி: வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நடத்தப்பட்டது. 5,432 மையங்களில் நடந்த இந்த நீட் தேர்வை 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததையடுத்து, 3ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்தது. அத்துடன் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், நாசிக்கை சேர்ந்த சுபம் கைர்னார், ஜெய்பூரை சேர்ந்த மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால், குருகிராமை சேர்ந்த யாஷ் யாதவ் ஆகிய 5 பேரை கைது செய்தது. இந்நிலையில் இளநிலை நீட் மறுதேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக தெரிந்தவுடன் அதை ரத்து செய்வதே சிறந்தது என முடிவு செய்தோம். ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறும். மறுதேர்வு எழுதுவதற்கான காலம் 15 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வு மாலை 5.15 மணி வரை நடத்தப்படும். இந்த தேர்வுக்கு மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூன் 14ம் தேதிக்குள் அனைத்து தேர்வர்களுக்கும் வழங்கப்படும். மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான், “மாணவர்களும், அவர்களின் எதிர்காலமும்தான் ஒன்றிய அரசின் முன்னுரிமை. கடின உழைப்பு, முயற்சிகளின் மீது அரசாங்கம் எப்போதும் மிகுந்த அக்கறையும், நம்பிக்கையும் வைத்துள்ளது. கல்வித்துறையில் எந்தவொரு மாஃபியா சதியாலோ, பணபலத்தாலோ, தகுதியற்ற நபர்களாலோ மாணவர்கள் தங்களின் உரிமைகளை இழந்து விடக்கூடாது. நீட் தேர்வு முறைகேடுகள் பூஜ்ய சகிப்புத்தன்மையுடன் அணுகப்படும். ஏற்கனவே நடந்த முறைகேடு விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ மீது நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பாஜ கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வௌியில் இருந்தாலும் யாரும் நிச்சயம் தப்பிக்க முடியாது. அத்துடன் நீட் தேர்வு முறைகேடுகளை தவிர்க்க அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
