×

சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநருடனும் எடப்பாடி அணி சந்திப்பு

* சட்ட ஆதாரங்களுடன் எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் முறையீடு; சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பும் காப்பாற்றும்படி மனு

சென்னை: தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்தனர். சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பும் தங்களை காப்பாற்றும்படி அடுத்தடுத்து சபாநாயகரை சந்தித்து கடிதம் அளித்தனர். எடப்பாடி அணி ஆளுநரையும் சந்தித்து பேசினர். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற பேச்சு எழுந்த நிலையில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனியாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்றும், கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். மேலும் சட்டசபை அதிமுக குழு தலைவராக வேலுமணியையும் தேர்வு செய்தனர். இதனிடையே எடப்பாடியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்து அவரது தரப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதேபோல் எஸ்.பி.வேலுமணியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தை சி.வி.சண்முகம் தரப்பினரும் கொடுத்தனர்.

இதனால் அதிமுக இரண்டாக உடைந்ததாக கருதப்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் விவகாரம் அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரது நடவடிக்கைக்கையால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை பறித்த நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் சபாநாயகரை நேரில் சந்தித்து மீண்டும் முறையீடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிமுக பிளவுப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகரை தனித்தனியே சந்திக்க திட்டமிட்டனர்.

அதன்படி எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தனர். மேலும் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் கோரிக்கை விடுத்தனர். இதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர்கள் சுட்டிக் காட்டி மனுவை கொடுத்தனர்.

அதே நேரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், காமராஜ், பால கிருஷ்ணரெட்டி, இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் வந்தனர். அவர்களும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை தனியே சந்தித்து பேசினர். அப்போது நாங்கள் தான் உண்மையான அதிமுக. அதிமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும். எங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மனு அளித்தனர்.

இரு தப்பிரனும் மாறி மாறி சபாநாயகரிடம் மனுக்களை அளித்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது ஆளுநர் மாளிகையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேற்று புகார் அளித்தனர். அந்த மனுவில், அதிமுக கொறடாவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறியுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரை சந்தித்து மனு அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: எஸ்.பி.வேலுமணி தலைமையில் பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி சட்டமன்றக் குழு தலைவராகவும், என்னை கொறடாவாகவும் எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொண்டு நியமனம் செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உரிய விதிகள்படி நாங்கள் அவர்களுக்கு கூறியிருந்தோம். அதில், 25 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை ஏற்று நடந்தார்கள்.

22 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக கொறடா உத்தரவை நிராகரித்துள்ளனர். எனவே, சட்டப்பேரவை சபாநாயகரை எங்கள் அதிமுக குழு சந்தித்து, 22 பேர் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுதான் சட்ட விதி. சட்டமன்றக் கட்சி என்பதுதான் செல்லும். அதைத்தான் நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. பெரும்பான்மைதான் செல்லும். சபாநாயகர் உரிய விதிகளின்படி நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Thaveka ,Edappadi ,C.V. Shanmugam ,S.P. Velumani ,Chennai ,Thaveka.… ,
× RELATED ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு