நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்தார். மேற்கு வங்க தேர்தலில் நந்திகிராம், பவானிபூர் ஆகிய தொகுதிகளில் முதல்வர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இதையடுத்து, நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை முதன்முறையாக கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடந்த 9ம் தேதி ெகால்கத்தாவில் நடந்த விழாவில் பாஜவின் முதல் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். இவர், நந்திகிராம், பவானிபூர் என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். இதில், பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோற்கடித்திருந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இரு பதவிகளை ஒரே நேரத்தில் வகிக்க முடியாது என்பதால், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதுகுறித்து, சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘நந்திகிராம் தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அங்கு இடைத்தேர்தல் மூலம் வேறு ஒருவர் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவார். மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை போலவே, நந்திகிராம் மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ என்றார்.

Related Stories: