திருவனந்தபுரம், மே 14: கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. கேரளாவில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் 4.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் நிறைவடைந்தது. மே 15ம் தேதி (நாளை) தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக கல்வித்துறை அமைச்சர் தான் தேர்வு முடிவுகளை அறிவிப்பார். ஆனால் கேரளாவில் புதிய அரசு இதுவரை பொறுப்பேற்காததால் தேர்வு முடிவுகள் அறிவிப்பது தள்ளிப்போகும் என கருதப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி 15ம் தேதி (நாளை) வெளியிட தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தலைமையில் நேற்று நடந்த கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சருக்கு பதிலாக பொதுக்கல்வித்துறை இயக்குனர் தேர்வு முடிவுகளை அறிவிக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
