- உதயநிதி ஸ்டாலின்
- திமுக சட்டமன்றக் கட்சி
- ஜனாதிபதி
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- கே. என் நேரு
- துணை ஜனாதிபதி
- ஈ.வி.வேலு
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தெலுங்கு தேசம்
- திமுக
- AIADMK...
சென்னை: திமுக சட்டப்பேரவை கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது 234 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவானது. அதிக இடங்களை பிடித்த தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து தவெகவிற்கு 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தன. மேலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தவெகவின் ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 120 ஆனது. இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். தொடர்ந்து அவரை ஆட்சி அமைக்க வருமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர ேவண்டும்” என்றும் தெரிவித்து இருந்தார். இதனிடையே, தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூட உள்ளது. இதில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். இதற்கிடையில் திமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வம் திமுகவினரிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் திமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 7ம் தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக சட்டப்பேரவை கட்சியின் துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடுத்தபடியாக அதிக எம்எல்ஏக்களை திமுக கொண்டுள்ளது. இதையடுத்து திமுக சட்டப்பேரவை கட்சியின் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகிறார்.

