×

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தாமதமாக பாட வைத்தது அநீதி: பொதுப்பள்ளி மாநில மேடை கண்டனம்

 

மதுரை: தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தாமதமாக பாட வைத்தது அநீதியான செயல் என பொதுப்பள்ளி மாநில மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை: தமிழ்நாடு அரசு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தமிழ்நாட்டின் தனித்துவத்தை தொலைத்தது வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசு பின்பற்றி வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் மரபை மாற்ற அனுமதிக்க இயலாது. தமிழ்நாடு அரசு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி ‘ஜன கண மன’ என தொடங்கும் தேசிய கீதம் இசைத்து நிறைவு பெறுவது வழக்கம் மற்றும் நடைமுறை. மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் ஒருசேர வெளிப்படுத்துவதே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குரியத் தனிச் சிறப்பாகும்.

அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்நாடு அரசு இதுவரை பின்பற்றி வந்த மரபும், அரசாணையும் மீறப்பட்ட நிகழ்வு, நம் மாநிலத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இது தமிழர்களின் மொழி உணர்வை பாதிக்கும் செயல் மட்டுமல்ல, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் இந்திய கோட்பாட்டை சிதைக்கும் செயலாகும்‌. தமிழுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை கண்டிக்க தமிழர்கள் குரலெழுப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு தனது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அனைத்து தமிழ்நாடு அரசு விழாக்களிலும், இதுவரை பின்பற்றி வந்த மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே முதலில் பாட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Tamil Nadu Cabinet ,Public School State Forum ,Madurai ,Prince ,Gajendrababu ,General Secretary ,Chennai ,
× RELATED திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு...