சென்னை: விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடியதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக (ஐடி விங்க்) : தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா? தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும். பாஜ ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு ‘வந்தே மாதரம்’ ஒலிக்கவில்லை. ஆனால், இங்கே ‘மாற்றம்’ என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ மூன்றாம் பட்சமாக நிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்! மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா? முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம். வைகோ (மதிமுக): புதிய அரசு பதவி ஏற்பு விழா, ஆளுநர் வழிகாட்டுதலில் நடைபெற்றதால் “வந்தேமாதரம்” முதன்மைப் படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது; தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்கவே முடியாது; தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்தியக கம்யூனிஸ்ட் கட்சி): தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். “வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
சண்முகம் (மார்க்சிஸ்ட்): தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசியகீதமும் பாடுவதுதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது. மேலும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. ஆகவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. ராமதாஸ் (பாமக): தமிழ்நாடு அரசியல் பண்பாடு மற்றும் மரபுகளின் எந்த ஒரு அரசு நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். நிகழ்ச்சி நிறைவடையும்போது தேசிய கீதம் பாடப்பட்டுவது பல ஆண்டுகளாக மரபாக உள்ளது. இந்த மரபு தான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வை ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது.
ஆளூர் ஷாநவாஸ் (விசிக):தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள். சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள். முகம்மது முபாரக் (எஸ்டிபிஐ): புதிய அரசு பதவியேற்பு விழாவின் தொடக்க நிகழ்வுகள், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அரசு நடைமுறைகளைச் சிதைக்கும் வகையில் அமைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டிருப்பது நீண்டகால மரபை மீறிய செயலாகும். தமிழகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியமாகவும் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்தை விழாவின் தொடக்கத்திலேயே பாடிக் கௌரவிப்பதே முறையானது. இந்த முன்னுரிமை மாற்றமானது தமிழ்ப்பற்றுடைய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழ்நாட்டின் நீண்டகால மரபைப் புதிய அரசும் பின்பற்றி அதனைப் பாதுகாக்கும் வகையில் சட்டமன்றக் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். ஜோதிமணி (காங்கிரஸ்): தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும்,இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதுதான் வழக்கம். இந்த வழக்கத்தை வரும்காலங்களில் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதன்மையானதாக இருக்கவேண்டும்.

