×

112 பேருடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? விஜய் கோரிக்கையை நிராகரித்தார் ஆளுநர்: மெஜாரிட்டியுடன் வந்தால் தான் பதவிப் பிரமாணம் செய்வேன் என 2வது முறையாக திருப்பி அனுப்பினார்

 

சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்ற வக்கீல்களுடன் சென்று 2வது முறையாக நேற்றும் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என்று ஆளுநர் அர்லேகர் உறுதிபட தெரிவித்து விட்டார். இதனால் விஜய் ஏமாற்றத்துடன் திரும்பினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாதி இடம், அதாவது 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது தவெக எம்எல்ஏக்கள் 107 பேர் மட்டுமே உள்ளனர். விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும். அதனால் தற்போது விஜய் முதல்வராக, 107 எம்எல்ஏக்கள் தவெகவிடம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு, தனது 5 எம்எல்ஏக்கள் ஆதரவை நிபந்தனையுடன் தவெகவுக்கு அளிப்பதாக அறிவித்து, கடிதமும் வழங்கியது. இதையடுத்து 112 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்தனர். அப்போது, தனக்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எனது தலைமையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மெஜாரிட்டி ஆதரவான 118 எம்எல்ஏக்கள் ஆதரவை சட்டப்பேரவையில் நிரூபிப்பேன் என்று விஜய் கூறினார்.

ஆனால் தமிழக ஆளுநர் அர்லேகர், ‘‘தங்கள் கட்சிக்கு 112 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை 2 நாளில் வழங்குங்கள். இப்போது, நான் உங்களை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தால் அது குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும். சட்டப்படி, நீங்கள் 118 பேர் ஆதரவு பட்டியலை விரைவில் வழங்க வேண்டும். அதன்பிறகே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நான் வர முடியும்’’ என்று கூறினார். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 6 எம்எல்ஏக்களை பெறுவதில் தவெகவினர் ஆர்வம் காட்டினர். விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவை பெற விஜய் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்களின் ஆதரவு விஜய்க்கு இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக அறிவித்து விட்டனர். இதனால் விஜய் நேற்று பதவியேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் திமுக, அதிமுகவினர் ஆட்சி அமைப்பது குறித்தும் நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியானது. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று காலை 10.45 மணிக்கு மீண்டும் 2வது முறையாக கிண்டி கவர்னர் மாளிகை சென்று ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது, விஜய்யுடன் சில மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆளுநரிடம், \\”தவெகவுக்கு இப்பேது 107 எம்எல்ஏக்கள் மற்றும் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என 112 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இன்னும் பெரும்பான்மைக்கு 6 எம்எல்ஏக்களே தேவைப்படுகிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றதும், ஒரு சில நாளில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பார். அதனால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்கள் விஜய் தரப்பில் இருந்து ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு பெரும்பான்மை இல்லாத நேரங்களில் ஆளுநர் அரசியல் கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததற்கான ஆவணங்களையும் வழங்கினார்.

இதை தொடர்ந்து ஆளுநர் அர்லேகர், விஜய்யிடம், ‘‘இப்போது தங்களை 112 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரிக்கிறார்கள். சட்டப்பேரவையில் எப்படி 118 எம்எல்ஏக்களின் ஆதரவை நீங்கள் காண்பிக்க முடியும். சட்டப்படி 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் என்னிடம் கொடுத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும். இல்லையென்றால் சட்டப்படி நான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பேன்’’ என்று கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நடைபெற்றது. ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு விஜய் கவர்னர் மாளிகையில் இருந்து பகல் 11.40 மணிக்கு வெளியே வந்தார். இதையடுத்து ஆளுநரின் அழைப்புக்காக விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆவலோடு எதிர்பார்த்து நேற்று முழுவதும் காத்திருந்தனர். ஆனால், ஆளுநரிடம் இருந்து நேற்று இரவு வரை விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை. முன்னதாக, பட்டினப்பாக்கம் இல்லத்தில் விஜய் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் அழைப்பு விடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம், உச்ச நீதிமன்றம் சென்று முறையிட்டால் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதறகான நடவடிக்கைகளையும் தவெக முன்னணி தலைவர்கள் முயற்சி செய்தனர். சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்துக்கு தவெக நிர்வாகிகள் சென்று ஆதரவு கேட்டனர். ஆனால், இந்த கட்சிகள் யாரும் உடனடியாக தங்களது ஆதரவை தெரிவிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளிடம் பேசி பதில் சொல்வதாக கூறி அனுப்பி விட்டனர். இதனால் தவெக நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவெக தரப்பினர் விழி பிதுங்கியுள்ளனர்.

 

Tags : Vijay ,Chennai ,Thaweka ,Tamil Nadu ,Governor ,Arlekar ,Supreme Court ,
× RELATED 10,000+ கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம்...