×

தமிழக எல்லை சோதனைச்சாவடியில் சிக்கியது; காரின் ரகசிய அறையில் கடத்திய 2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

கூடலூர்: தமிழக எல்லை சோதனைச்சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் இருந்து கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கேரள, தமிழக எல்லையில் உள்ள முத்தங்கா சோதனைச்சாவடியில் காவல்துறை மற்றும் கலால்துறை போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளா நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை சோதனை செய்ய போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் வந்த சுல்தான்பத்தேரி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் (44), கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (40) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து காரில் சோதனையிட்டனர். அப்போது காரின் உள்ளே பல இடங்களில் சிறிய அளவிலான ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்த போலீசார், காரில் இருந்த ரூ. 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த 2 பேரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : STRANDED ,CRORE HAWALA ,KUDALUR ,TAMIL ,Kerala State Wayanadu District ,Sultan Bateri ,National Highway ,Mysore ,Karnataka State Kundalpet Kerala, Tamil ,
× RELATED விஜய்யுடன் தலைமை செயலர் டிஜிபி,...