×

11 மாவட்டங்களில் கனமழை: மேலும் நீடிக்க வாய்ப்பு

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. இது மேலும் நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இடிமின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கரூர், ஈரோடு, வேலூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்நிலையில், வளி மண்டத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சியும், சுமார் 0.9 கிமீ உயரத்தில் வட உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதையும் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை இன்று தொடங்கி 11ம் தேதி வரை பெய்யும். 12ம் தேதியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதக்கோட்டை மாவட்டங்களி் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். இது தவிர, 10ம் தேதி வரையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும், என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Mannar Bay ,Chennai Meteorological Centre ,
× RELATED விஜய்யுடன் தலைமை செயலர் டிஜிபி,...